Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

போரின் வெற்றிக்கு புது வழி சொன்னவன்

போரின் வெற்றிக்கு புது வழி சொன்னவன்

போரின் வெற்றிக்கு புது வழி சொன்னவன் !

போரின் வெற்றிக்கு புது வழி சொன்னவன் !

மானத்தை எப்படி அளவிடலாம் ? இது நீண்ட காலமாக மனதை அரிக்கும் ஒரு கேள்வி ! மானம் போச்சே ! மானம் போச்சே ! என்று கதறுகிறவர்கள் எல்லோரும் மானத்துக்கு என்ன வரையறை என்பதைத் தெரிந்து கொண்டு கதறுவதுமில்லை.

மானத்தின் வரையறை இனத்திற்கு இனம் வேறுபடும். ஆதிகாலம் முதலே தமிழர்கள் மானத்தை தண்ணீருடன் தொடர்பு படுத்தி அளவெடுத்து வந்துள்ளனர். சங்க காலத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் எதிரிகளால் கைது செய்யப்படுகிறான். அவன் கைகளையும், கால்களையும் சங்கிலியால் பிணைத்து சுரங்க அறையில் பூட்டி வைக்கிறார்கள்.

உயிர் போகும் இறுதிப் பொழுது. உயிர் பிரியும்போது ஏற்படும் இறுதிப் பெரும் தாகம் ஏற்படுகிறது. எதிரிகள் அவன் உயிர் பிரியாதிருக்க ஒரு பாத்திரத்தில் நீரைக் கொடுக்கிறார்கள்.

நீரா ? உயிரா ?

உயிரா ? மானமா ?

மானமா ? நீரா ? தண்ணீர்ப் பாத்திரத்தை சுழற்றி வீசுகிறான். அவன் உயிர் காற்றில் பறக்கிறது.

இந்தக் கதைதான் மானத்திற்கு வரைவிலக்கணம் தரும் தமிழர் பண்பாட்டின் ஆரம்பகாலக் கதை ! நீரில் மட்டும்தான் உயிர்கள் தோன்றும். தரையில் வாழும் உயிரினங்களின் வயிற்றிலும் பன்னீர்க் குடத்தை வைத்துத்தான் இயற்கை உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி உயிரை உருவாக்கிய நீரையே அந்த உயிரானது நிராகரித்து விட்டு தன்னையே அழித்துக் கொள்ளுமானால் அதுதான் மானத்தைக் காக்கும் இறுதி எல்லை என விளக்குகிறது இக்கதை.

இதே மானத்தைக் காக்கும் நீரை வைத்து தமிழீழத்திலும் ஒரு யாகம் நடைபெற்றது. அதை நடாத்தியவர்தான் தியாக வேங்கை திலீபன். பட்டினி நெருப்பின் காங்கையை குளிர்ந்த நீரூற்றி அணைக்க மறுத்த சத்தியச் சுடர்.

தேனும், பாலும் தமிழீழத்தில் பாய்கிறது ! அமைதிப் புறா சிறகடித்துப் பறக்கிறது, அரிசியும் மாவும் வானில் இருந்து கொட்டுகிறது என்று மீடியாக்களால் ஆன ஒரு சமாதானத் தீர்வை தமிழீழத்திலும் அறிமுகம் செய்ய இந்திய - இலங்கை அரசுகள் முயற்சிகள் எடுத்தன.

தமிழீழ மக்கள் அறிவுடையவர்கள். தலைவர் பிரபாகரன் உலக வராலாறுகளை எல்லாம் கரைத்துக் குடித்தவர் என்பது பலருக்குத் தெரியாது. திரைப்படத்தில் நடிப்பது நாட்டை ஆளும் தகைமை என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணப் பாங்குடையோர் எடைபோட முடியாத உன்னதத் தலைவர். வரதராஜப் பெருமாள் பிரகடனப்படுத்திய தமிழீழம் போல வெறுமனே மீடியாக்களால் சுதந்திரங்கள் பிரகடனப் படுத்தப்பட்ட நாடுகளையும் அவற்றின் சீர் குலைவுகளையும் அவர் அறியாதவர் அல்ல.

இருப்பினும் பறப்பது அமைதிப்புறா என்று பலர் நம்பினர். இந்தியப்படை வந்தாலும், உலகப் படைகளே வந்தாலும் இலங்கைத் தீவில் ஒரே நாளில் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்த்த வேண்டிய முக்கியமான பொழுதுகள் அவை.

சாரமற்ற இந்தோ இலங்கை ஒப்பந்தத்தையே அமுல் செய்ய சிங்கள அரசு உடன்படாது. அதிகம் ஏன் சாதாரண ஐந்து அம்சக் கோரிக்கைக்கே அவர்கள் இணங்கி வரமாட்டார்கள். இந்த உண்மையை உணர்த்த உணவும் நீரும் அருந்தாமல் சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் தியாகி திலீபன்.

நல்லு}ரின் வீதியிலே நடந்தது ஒரு யாகம் !

நாலு நாளில் சரிந்தது அவன் தேகம் !

விடுதலைப் புலிகள் பெரும் தவறிழைத்து விட்டார்கள். உணவும், நீரும் அருந்தாமல் உண்ணா நோன்பிருக்க இந்த நு}ற்றாண்டில் யாராவது முன்வருவார்களா? இந்திய ராஜதந்திரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். காந்திய வழியில் போரிட்டால் ஓடி வந்து தலை வணங்குவேன் என்ற ஜே.ஆர் அதைப் பார்த்த பின்னர் மௌனவிரதம் இருந்தார். அவர் கூறிய காந்தியம் வெறும் டயலாக் என்பது இங்கு சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

பட்டினியின் கொடுமை தாங்காது திலீபன் தண்ணீரைக் குடிப்பார் தமிழினத்தின் ஆன்ம பலம் உடையும் ! இது பெரிய சத்திய சோதனை ! இதை ஒருபோதும் திலீபன் கடக்க மாட்டார் என்று எதிரிகள் மனம் போனபடி எடை போட்டனர்.

எதிரிகளின் கையாட்களான தமிழர் பலர், திருட்டுத் தனமாகவேனும் தண்ணீரைக் குடிக்காமலா இருப்பார்கள் என்று மற்றவர் காதில் படும்படியாக பேசித் திரிந்தார்கள். திலீபன் படும் உபாதையைக் கண்டு, தாங்க முடியாத போராளி ஒருவர் ஒரு மிடறு தண்ணீர் குடிக்கலாமே ? என்று கேட்டிருக்கிறார்.

அவரை சத்திய நெருப்பான திலீபன் எரித்து விடுவதைப் போல பார்த்து விட்டு, என்னை இப்படி அவமானப் படுத்தாதீர்கள் என்று மட்டும் வருத்தமாகக் கூறிக் கொண்டார்.

இந்த வரிகள் மிகமிக முக்கியமானவை. மானமும், தண்ணீரும் ஒன்றாக கணிக்கப்பட்ட வரலாற்றுப் பெறுமதி மிக்க இடம். அந்த நேரத்தில் , அந்த வயதில் உயிருக்காக தண்ணீரை அருந்துவது மானமிழக்கும் ஓர் செயல் என்பதை அந்த வீரனின் வரிகள் செவ்வனே உணர்த்தி நின்றன.

உணவின்றி, நீரின்றி பன்னிரண்டாவது நாள் அவன் உயிர் வானில் கலந்தது. சங்ககால வீரன் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்குப் பின்னர் தமிழீழ மண்ணில் தோன்றி நீரே அருந்தாது மானங்காத்த வீரன் திலீபன்.

அமைதி ஒப்பந்தம் கிழிந்தது. பறப்பது அமைதிப் புறா அல்ல என்ற உண்மையை உலகத்திற்கும் உணர்த்தினான் திலீபன். ஆயினும் திலீபனின் மரணத்தில் ஓர் உன்னத செய்தி இருக்கக் காண்கிறேன். உணவையும், நீரையும் ஆயுதமாக்குங்கள் ! அதை வெற்றிக்குப் பயன் படுத்துங்கள் என்று அவர் ஆன்மா அன்றே செய்தி சொல்லியது. இதுவே திலீபனின் மரணம் சொன்ன உயர்ந்த தகவல். அணு குண்டுகளை வீசிப் பெற முடியாத வெற்றிகளையும் கூட உணவையும், நீரையும் ஆயுதமாகப் பயன்படுத்தி அடைந்து விடலாம் என்று தெரிவித்தது.

அந்த உண்மையை ஆனையிறவில் இருந்த சிறீலங்கா இராணுவ முகாமிற்கு செல்லும் உணவையும், நீரையும் விடுதலைப் புலிகள் தடை செய்த போது 200 வருடங்களுக்கு மேலாக வீழ்ந்து போகாதிருந்த பாரிய முகாமே வீழ்ந்து போனபோது கண் முன்னால் கண்டோம்.

ஆம் !

அன்று நீரையும், உணவையும் நிராகரித்து மானம் காத்தான் தியாகி திலீபன் !

நீரையும், உணவையும் தடை செய்தால் போரின்றி எதிரி முகாம் வீழும் என்று நமக்கெல்லாம் புது வழி சொன்னவனும் அந்தப் புலி வீரனே !

BY TIGERSLAND TEAM RUBAN,MOHAN, CONTACT US JASISIVA@HOTMAIL.COM AND liltamilpuli@hotmail.COM